Malar Consultancy

Malar Consultancy for better consultancy services

01/04/2015

வில்லா கிரீன்- இயற்கைச் சூழலில் கனவு வீடுகள்

சென்னை போன்ற நகரங்களில் வீடு என்பது நடுத்தர மக்களைப் பொறுத்தமட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புதான். அதுவும் நகர நெருக்கடிக்கு இடையில் ஒரு சிறிய கூடு போல ஒரு வீடு. வீட்டு ஜன்னலுக்கு அருகிலேயே மற்றொரு வீடு, சுற்றுச் சுவர் கூட இல்லாமல் வீதியை நெருக்கிக் கட்டியிருக்கும் விதம் என இந்த வாழ்க்கைக்கு நாம் பழக்கப் பட்டுவிட்டோம்.

நம் பிள்ளைகளுக்கோ பால்கனியை விட்டால் விளையாட வேறு இடம் இல்லை. இந்த நிலைக்கு மாறாக விசாலமான வீதி, சுற்றிலும் இயற்கைச் சூழல், பிள்ளைகள் விளையாட மைதானம், வாரக் கடைசியில் கேளிக்கைக்கு ஒரு கூடம் என எல்லாம் அமைந்த ஒரு வீடு என்பது நம் ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கும். அந்தக் கனவை நனவாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது கீரீன் ஹோம்ஸ் பார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம்.

வில்லா க்ரீன் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR Road) கேளம்பாக்கத்தில் உருவாகிவருகிறது. 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டம் இடநெருக்கடியின்றி இயற்கைச் சூழலில் எழுந்துவருகிறது.

“40 ஏக்கர் பரப்பளவில் பொதுவாக இப்போது மற்ற நிறுவனமாக இருந்தால் கிட்டத்தட்ட 11 ஆயிரம் யூனிட்டுகளை உருவாக்கிவிடுவார்கள். நாங்கள் அதே 40 ஏக்கர் நிலப்பரப்பில் வெறும் 550 யூனிட்டுகளை மட்டும் உருவாக்கி இருக்கிறோம். மீதி இடங்களை ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்காகவே விட்டிருக்கிறோம்” என்கிறார் கீரீன் ஹோம்ஸ் பார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தேவதாசன்.

வில்லாக்கள், ரோ ஹவுஸ், ப்ளாட் ஆகிய மூன்று விதமான வீடுகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. விலையைப் பொறுத்தவரை 10 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை விற்பனைக்கு இருக்கின்றன. உங்கள் தேவைக்கும் பொருளாதார நிலைக்கும் தகுந்தாற்போல் உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம்.

இளைஞர்கள் விளையாடுவதற்கேற்ற கிரிக்கெட், டென்னிஸ் மைதானங்கள் அமையவுள்ளன. பெரியவர்களுக்காக கிளப் ஹவுஸ் திட்டத்தின் உள்ளேயே அமையவுள்ளது. இது மட்டுமல்லாது சர்வதேசத் தரத்திலான பள்ளி ஒன்றுக்கான இடத்தை இத்திட்டத்துடன் இணைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். உள்ளே எட்டுப் பூங்காக்கள் அமையவுள்ளன.

இதில் ஒன்றின் பரப்பளவு மட்டும் 7.5 ஏக்கர் ஆகும் என்கிறார் ஞானசேகர் தேவதாசன். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான ஓ எம் ஆர் சாலையில் பொதுவாகத் தண்ணீர்ப் பிரச்சினை இருக்கும். அதாவது கிடைக்கும் நிலத்தடி நீரில் உப்புச் சுவை மிகுந்து இருக்கும். ஆனால் இந்த வில்லா க்ரீனில் நல்ல தண்ணீர் கிடைப்பதாகச் சொல்கிறார் ஞானசேகரன்.

மேலும் முழுக் குடியிருப்புத் திட்டத்துக்கும் கழிவு நீர் வெளியேற்றும் செயல் திட்டத்தை சென்னையின் பிரபலமான நிபுணர்களைக் கொண்டு நிர்மாணித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது சென்னையில் முதன் முறையாக மின்சார இணைப்புக்கான அண்டர்கிரவுண்ட் கேபிளிங் செய்திருக்கிறார்கள்.

01/04/2015

ரசனையான அலமாரிகள்

தேன்கூடு, எழுத்துகள், கோணங்கள் என வித்தியாசமான வடிவங்களில் இப்போது புத்தக அலமாரிகள் கிடைக்கின்றன. ஒரே மாதிரியான புத்தக அலமாரிகளைப் பார்த்து அலுத்துப் போயிருப்பவர்கள் இந்த வித்தியாசமான, புதுமையான வடிவங்களில் கிடைக்கும் அலமாரிகளை முயன்று பார்க்கலாம்.

மிதக்கும் புத்தகங்கள்

வளைவுப் புத்தக அலமாரி உங்கள் வீட்டின் சுவர்களையும் சேர்த்து அழகுபடுத்தி விடும். புத்தகத்தை வித்தியாசமாக அடுக்க நினைப்பவர்களுக்கு இந்த வளைவுப் புத்தக அலமாரிகள் ஏற்றவை.

ஆனால், இந்த அலமாரியில் சாதாரணப் புத்தக அலமாரியில் வைக்கும் அளவுக்குப் புத்தகங்களை வைக்க முடியாது. குறைவான புத்தகங்களை அழகாக அடுக்கிவைக்க நினைப்பவர்களுக்கு இந்த அலமாரி சிறந்த தேர்வாக இருக்கும்.

தேன்கூட்டில் புத்தகங்கள்

தேன்கூடு புத்தக அலமாரிகள் புதுமையை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். புத்தகங்களோடு சேர்த்து இதில் அலங்காரப் பொருட்களையும் அடுக்கிவைக்கலாம். இந்தப் புத்தக அலமாரி வீட்டுக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஆனால், இதில் புத்தகங்களைச் சீரான விதத்தில் அடுக்க முடியாது. ஒருவிதமான ஒழுங்கற்ற முறையில்தான் அடுக்க முடியும். எனவே, புத்தகங்கள் கச்சிதமாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அலமாரியைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.

விதவிதமான கோணங்கள்

விதவிதமான கோணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரி உடனடியாகப் பார்வையைக் கவரும். இந்த அலமாரியின் வெளிப்புறம்தான் வித்தியாசமான வடிவத்தில் இருக்கும். அதனால், இந்த அலமாரியில் புத்தகங்களை அடுக்கிவைப்பதில் உங்களுக்குச் சவால்கள் எதுவும் இருக்காது.

இணைந்திருப்பது அழகு

மிதக்கும் புத்தக அலமாரிகளில் முடிவில்லாமல் இணைந்திருக்கும் புத்தக அலமாரிகள் அடுக்குவதற்கு மேலும் வசதியானதாக இருக்கும். வரவேற்பறைச் சுவரில் பொருத்துவதற்கு இந்த மிதக்கும் அலமாரி சிறந்தது. பொதுவாக மிதக்கும் அலமாரிகள் முடிவில்லாமல் இருப்பதால் பிரச்சினை இருக்கும். ஆனால், அந்தப் பிரச்சினை இந்த அலமாரியில் கிடையாது.

புத்தகப் பெட்டிகள்

புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கிவைப்பது என்பது பழைய முறைதான். ஆனால், இப்போது அதையும் புதுமையான முறையில் செய்ய முடியும். மரத்தாலான இந்தப் புத்தகப் பெட்டிகளை அப்படியே சுவரில் பொருத்திவிடலாம்.

இந்தப் புத்தகப் பெட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மேல்புறத்தை அலங்காரப் பொருட்கள் வைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். வித்தியாசமான ஜியோமெட்டிரி வடிவங்களில் இந்தப் புத்தகப் பெட்டிகளை வீட்டின் வரவேற்பறையில் பொருத்தலாம்.

தாறுமாறாக அடுக்கலாம்

தாறுமாறான வடிவமைப்பில் வரும் புத்தக அலமாரிகள் இப்போது பிரபலமாக இருக்கின்றன. ஒவ்வொரு அலமாரியும் ஒவ்வொரு வடிவத்தில், ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால் இது வீட்டுக்கு ஒரு புதுப்பொலிவைக் கொடுக்கும். நவீனம், வித்தியாசம் என இரண்டையும் விரும்புகிறவர்களுக்கு இந்த அலமாரி பொருத்தமானதாக இருக்கும்.

01/04/2015

பார்த்துப் பார்த்து வீட்டைக் கட்டுவோம்

கடும் மழையிலும், கொடும் வெயிலிலும் பாதுகாப்பு தேடி ஒரு மரத்தடியில் அல்லது ஏதேனும் ஒரு மறைவில் பதுங்கிக்கொள்கிறோம். இப்படி எப்போதும் எங்கேயாவது பதுங்கிப் பதுங்கி வாழ முடியுமா? ஆகவே நமக்கென ஒரு வீடு இருந்தால் நல்லது எனத் தோன்றுகிறது. வீடு கட்டும் முனைப்பில் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறோம்.

ஒரு வீடு எப்படி அமைவது நல்லது என ஆளாளுக்கு ஒரு கருத்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் எல்லோருக்கும் உடன்பாடு ஏற்படக்கூடிய அளவில் பொதுவான ஒரு கருத்தும் இருக்கத்தானே செய்யும். அப்படியான விஷயங்களைப் பார்க்கலாம்.

முதலில் நாம் வீடு எதற்காகக் கட்டுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பல வீடுகள் வைத்திருப்போர் பொருளாதார வசதி கைகொடுக்கும் சூழலில் வீடு கட்டினால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வீட்டைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் வங்கிக் கடன், தெரிந்தவர்களிடம் கடன் என அஸ்திவாரம் முதல் கூரை வரை கடனிலேயே வீடு கட்ட முயல்பவர்கள் முடிந்தவரை அநாவசிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

நீங்களே கட்டுமானப் பொருள்களை வாங்கி நம்பிக்கையான ஆட்களை வைத்து வீடு கட்டுவது மிகவும் சிறந்தது. ஆனால் அது இயலாத பட்சத்தில் நம்பிக்கையான ஒப்பந்தகாரர்களிடம் வேலையை ஒப்படைக்கலாம். அப்படி ஒப்படைக்கும்போது அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருந்துவிடாமல் ஒவ்வொரு வேலையையும் நீங்களும் கண்காணித்துவருவது மிகவும் அவசியம். அப்படிக் கண்காணித்து வந்தால் மட்டுமே அநாவசியமான செலவுகளைத் தொடக்க நிலையிலேயே தடுக்க இயலும்.

வீட்டின் பணி தொடங்குவதற்கு முன்னர் வீட்டின் வரைபடம் உருவாக்கப்படும்போதே நீங்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். சிக்கனமாக வீடு கட்டும் திட்டத்தில் இருக்கும்போது தேவைக்கதிகமான கலை சார்ந்த கட்டிட நுட்பங்கள் அதில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வடிவமைப்பிலேயே கலை சார்ந்த நுட்பங்களுடன் வீடு உருவாக்கப்பட்டால் அதன் செலவும் அதிகரிக்கும்.

நாம் வீடு கட்டுவது வசிப்பதற்கு மட்டுமே, அடுத்தவர் நமது வீட்டைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்போடு செயல்பட்டால் வீடு கட்டும் செலவு அதிகரித்துவிடும் அதனால் கடன் சுமையும் கூடிவிடும். அதே நேரத்தில் வீட்டுக்கு அவசியமான, பாதுகாப்பான விஷயங்கள் என்பனவற்றில் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அது வீட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் அதற்கான செலவைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. உதாரணமாக அழகான, கலை நயம் மிகுந்த முகப்பு அமைப்பதைவிட உறுதியான சுற்றுச் சுவர் முக்கியம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல் வீடு கட்டும்போது, கட்டுமானப் பொருள்கள் தரமானவையாக இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். நம்மிடம் தரமான கட்டுமானப் பொருள்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு தரத்தில் குறைந்த பொருள்களைக் கொண்டு கட்டிவிட வாய்ப்பு இருக்கிறது. தரம் குறைந்த கட்டுமானப் பொருளைக் கொண்டு வீடு கட்டினால் நமக்கு இரு வகையான நஷ்டங்கள். ஒன்று பொருளாதாரம் தொடர்பானது. மற்றொன்று பாதுகாப்பு தொடர்பானது. ஆகவே அதில் கவனம் அவசியம்.

மேலும் ஒவ்வொரு தருணத்திலும் தேவையான கட்டிடங்கள் மட்டுமே எழுப்பப்பட வேண்டும். வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடம் எழும்புகிறதா என்பதைக் கவனிப்பதும் அவசியம். ஒப்பந்தக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு வேலை; அவ்வளவே. ஆனால் அதன் ஒவ்வொரு செங்கல்லுக்கும் நாம் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைக்க வேண்டும். ஆகவே அநாவசியச் செலவைத் தவிர்ப்பதில் கண்கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்.

வீட்டின் ஒவ்வொரு அறையும் எப்படி அமைய வேண்டும் அதில் என்னென்ன மாதிரியான வசதிகள் வேண்டும் என்பதில் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். வரவேற்பறை, சமையலறை, குளியலறை போன்ற அனைத்து அறைகளிலும் தேவையான வசதிகளை முறையாக அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் எல்லாம் சன்னல்களும், வெண்டிலேட்டர் துவாரங்களும் அமைக்கப்பட வேண்டும்.

முறையான சன்னல்கள் அமையும்போது வீட்டுக்குத் தேவையான வெளிச்சமும் காற்றும் கிடைத்துவிடும். எனவே தேவையின்றி விளக்கேற்ற வேண்டியதில்லை மின்விசிறியைச் சுழலவிட வேண்டியதில்லை. சமையலறையில் அவசியமான இட வசதி வேண்டும்.

மிகவும் நெருக்கமான இடைவெளி இருந்தால் சமையல் வேலையை எளிதாகச் செய்ய இயலாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைப் போன்று ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்துவிட்டால் வீடு கட்டிக் குடியேறிய பின்னர் நிம்மதியாக அங்கே வாழலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

முதலில் நாம் வீடு எதற்காகக் கட்டுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பல வீடுகள் வைத்திருப்போர் பொருளாதார வசதி கைகொடுக்கும் சூழலில் வீடு கட்டினால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வீட்டைக் கட்டிக்கொள்ளலாம்

Address

Iyerbungalow
Madurai
625014

Alerts

Be the first to know and let us send you an email when Malar Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share